இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணையதளம் முகவரிக்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மார்ச் 6-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில் ஏப்ரல் 6-ம் தேதி வரை திறந்திருக்கும். இந்த தேதிக்குள் நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதோடு உரிய கட்டணத்தையும் செலுத்தி விட வேண்டும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ. 1700, ஓபிசி மற்றும் EWS பிரிவு மாணவர்களுக்கு ரூ. 1600, SC, ST, PWD பிரிவு மாணவர்கள் / மூன்றாம் பாலின மாணவர்கள் ஆகியோருக்கு ரூ
1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இளநிலை நீட் தேர்வு மே மாதம் 7-ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறும் நிலையில், நீட் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் நீட் தேர்வு இணையதளத்திற்குள் (neet.nta.nic.in) சென்று ரெஜிஸ்ட்ரேஷன் என்ற பகுதியில் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் முதல்முறையாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவராக இருந்தால் உங்களுடைய விவரங்களை பதிவு செய்துவிட்டு உங்களுடைய பதிவெண் மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு லாகின் பகுதியில் உங்களுடைய பதிவெண் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை கவனமான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும். அதில் கேட்கப்பட்டிருக்கும் சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பிறகு விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விட்டு சமிட் கொடுத்தால் உங்களுடைய இமெயில் முகவரிக்கு விண்ணப்பம் உறுதியான தகவல் வந்துவிடும். மேலும் இளநிலை நீட் தேர்வு தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், மலையாள உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.