இந்தியாவில் கோடை காலம் நெருங்கும் நிலையில் தற்போதிருந்தே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. தமிழகத்திலும் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் கோடை கால வெப்பம் மற்றும் வெப்ப அலைகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முழுவதும் கோடை காலம் என்பதால் அதிக அளவிலான வெப்பம் நிலவுகிறது.

எனவே பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதன்பிறகு டீ, காபி, கார்பன் டை ஆக்சைடு ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்கள் மற்றும் மதுபானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறினார். மேலும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க தர்பூசணி மற்றும் இளநீர் போன்ற குளிர்ச்சியான பொருட்களை உட்கொள்வது நல்லதாகும்.