மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். “தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்தும், முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டப் பணிகள் ஆமை வேகத்திலேயே நடக்கின்றன.
தேர்தலை முன்னிட்டு இப்போது அவசரம் அவசரமாகத் திறந்து வைத்தாலும், பல இடங்களில் இணைப்புகள் முறையாக வழங்கப்படவில்லை” எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், பொங்கல் பரிசுத் தொகையாக 3,000 ரூபாய் வழங்குவது குறித்துப் பேசிய அவர், “தேர்தல் வருவதால் மக்களைக் கவரப் பல ஆயிரம் கோடிகளைச் செலவழித்தாலும், பொங்கலுக்கு 3,000 ரூபாய் கொடுத்தாலும் திமுக மீண்டும் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை.
மக்கள் இந்த ஆட்சியை அகற்றத் தயாராகிவிட்டார்கள்” என்றார். விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படச் சிக்கல் குறித்த கேள்விக்கு, “விஜய்யின் அரசியல் வருகையைத் தடுக்க எத்தனையோ வழிகள் உள்ளன, அதை விட்டுவிட்டு ஒரு திரைப்படத்திற்கு நெருக்கடி கொடுப்பது தேவையற்றது.
இதில் வீணாக அரசியல் சாயம் பூசப்படுகிறது” எனத் தெரிவித்தார். இறுதியாக, “முருகப் பெருமானை விமர்சனம் செய்ததால்தான் திருப்பரங்குன்றம் அருகே முதலமைச்சரின் கார் டயர் பஞ்சராகிப் போனதோ என்னவோ!” எனத் தனது பாணியில் ஒரு ‘கமெண்ட்’ அடித்து கலகலப்பை ஏற்படுத்தினார்.
