தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து கடைவீதிகளிலும் ஜவுளி சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதிகளில் ஜவுளி சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் கூடும் நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தீபாவளி பண்டிகை விற்பனைக்காக கேரளா மற்றும் கர்நாடகா வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஜவுளிகளை மொத்தமாக இங்கு வாங்கி செல்கிறார்கள்.

இந்த நிலையில் ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒரே நாளில் குவிந்ததால் ஜவுளி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேசமயம் ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை 60 சதவீதத்திற்கும் மேல் நடந்தது. ஈரோடு ஆர் கே வி சாலை, நேதாஜி சாலை, மணிக்கூண்டு, மேட்டூர் சாலை மற்றும் பெருந்துறை சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதிகளில் ஏராளமான ஜவுளி கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜவுளி கடைகளில் மக்களின் கூட்டம் தற்போதைய அலைமோதுகிறது. அடுத்த வாரம் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் இனி வரும் நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.