திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரடியாக ஆய்வு செய்தார். குடியிருப்பு பகுதியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட தாலுகாக்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பூண்டி, புழல் பகுதிகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மற்றும் ஆரணி ஆற்று உபரி நீர் ஆகியவை தேங்கி வடியாமல் இருந்த இடங்களில் தற்போது தண்ணீர் வடிந்துவிட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் 15000 பேரை 172 முகாம்களில் தங்க வைத்துள்ளோம்.

இதுவரை ஐந்தாயிரம் பேருக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 99 சதவீதம் இயல்பு நிலை திரும்பி விட்டது. பூந்தமல்லி, பெரியார் நகர், சுதேசி நகர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சுமார் 150 மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் போர் கால அடிப்படையிலும் மற்ற இடங்களில் அரசின் விதிமுறைகளை பின்பற்றியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஒரு சில பகுதிகளை தவிர மற்ற இடங்களில் 100% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.