செல்போன் பயன்பாடு உச்சத்தை தொட்டிருக்கும் இன்றைய காலத்தில், டேட்டிங் செயலிகள் மூலம் ஏற்படும் ஆபத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கேரளாவில் 14 வயது சிறுவன் ஒருவன், டேட்டிங் செயலி வழியாக பழக்கமானவர்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பயணித்த அந்த சிறுவன், இந்த செயலி மூலம் சிலருடன் தொடர்பு ஏற்படுத்தியதை அடுத்து, அவர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டு, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளான்.
இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை, உடனடியாக நடவடிக்கை எடுத்து, நான்கு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது.
விசாரணையில், காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களைச் சேர்ந்த 14 பேர் இந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
இன்னும் பலர் இந்த சிறுவனை துன்புறுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறை, விசாரணையை மேலும் ஆழப்படுத்தி வருகிறது. இந்த சம்பவம், டேட்டிங் செயலிகளின் ஆபத்து குறித்து மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
