
பூவிருந்தவல்லி அருகே சக்தி நகர் பகுதியில் ஏற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் 7 பேர் தீக்காயமடைந்த சம்பவம் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. குமார் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வடமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி இருந்தனர். அவர்கள் மதிய உணவு தயாரிப்பதற்காக சிலிண்டரை ஆன் செய்த போது அதிலிருந்து கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
அந்த வீட்டில் இருந்த தொழிலாளர்கள் அவசரமாக வெளியேறிய நிலையில், எதிரே வசித்த பிரஜன், குமார், சரஸ்வதி ஆகியோர் விபத்தை காண முயன்ற போது சிலிண்டர் திடீரென வெடித்து, அவர்களுக்கு தீ பரவியது. இதனால் அவர்களும், அருகிலிருந்த மற்றவர்களும் காயமடைந்தனர். தீக்காயமடைந்த 7 பேரும் உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பூவிருந்தவல்லி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டில் காலி சிலிண்டர்களை பெட்ரோல் பங்க்களில் வாகனங்களுக்கு நிரப்பி வைத்து பயன்படுத்தி வந்தனர் என்பதும், அவற்றில் கசிவு இருந்ததை தடுக்காமல் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வீடு இடிந்து விழுந்ததோடு, சிலிண்டர் வெடிக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகி அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.