“மின் கட்டண மோசடி” என்று அழைக்கப்படும் ஒரு மோசடி நிகழ்வு சமீபத்தில் அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்த வகையான ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் அதிகாரப்பூர்வ மின்சாரத் துறைகள் அல்லது அதற்கான சேவை வழங்குபவர்களைப் போல போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். இந்தச் செய்திகள் பொதுவாக செலுத்தப்படாத பில்கள் உங்கள் தரப்பில்  இருப்பதாகக் கூறுவதுடன், உடனடியாகப் பணம் செலுத்தாவிட்டால்,  மின்சார சேவையைத் துண்டித்து விடுவதாக அச்சுறுத்தும் செய்தியாக இருக்கும். இதன் மூலம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி விரைவாக பணம் செலுத்த தூண்டுவதே இந்த மோசடியின் முதல்படி, 

மோசடி எவ்வாறு செயல்படுகிறது ? :

  1. *போலி செய்திகள்*: ஆன்லைன் மூலம் திருடப்பட்ட உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை கொண்டு மோசடி செய்பவர்கள் உங்கள் உள்ளூர் மின்சார அலுவலக நபர்கள் என கூறி செய்திகளை அனுப்புகிறார்கள். இந்தச் செய்திகள் பெரும்பாலும் அதிகாரப்பூர்வ அரசு லோகோக்களைக் கொண்டிருக்கின்றன.  
  1. *அவசரம் மற்றும் அச்சுறுத்தல்கள்*: உடனடியாக கட்டணத்தை செலுத்தாவிட்டால் உங்களது வீட்டிற்கு கொடுக்கப்படும் மின்சார சேவை துண்டிக்கப்படும் என அச்சுறுத்தி உங்களை விரைவாக நடவடிக்கையை மேற்கொள்ள மோசடிக்காரர்கள் வற்புறுத்துவார்கள். 
  1. *ஃபிஷிங் இணைப்புகள்*: இதையடுத்து பணத்தை கீழ்கண்ட இணைப்பின் மூலம் செலுத்துமாறு இணையதளத்திற்கான லிங்க் வழங்கப்படும் அல்லது ஏதேனும் மொபைல் எண் வழங்கப்படலாம். இந்த இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலம், உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத் திருட முயற்சிக்கும் ஃபிஷிங் இணையதளங்களுக்கு அது செல்லும்.
  1. *ஏமாற்றும் தந்திரங்கள்*: மோசடி செய்பவர்கள் தங்கள் செய்திகளை உண்மையாகக் காட்ட ஏமாற்றும் தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் உண்மையில், அவர்களுக்கு மின்சார துறையுடன் எந்த தொடர்பும் இருக்காது.

இத்தகைய மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள:

  1. *செய்தியைச் சரிபார்க்கவும்*: இதுபோன்று உங்களுக்கு வரும் குறுஞ்செய்தியின் உண்மைத்தன்மையை அறிய,  அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது உங்களது உள்ளூர் மின்சார துறை அலுவலகத்தின் தொடர்பு எண்ணை அறிந்து கால் செய்து அது உண்மையானதா ? என்பதை உறுதி செய்து கொள்ளவும். 
  1. *இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்*: இந்த மோசடி மட்டுமல்லாமல்,  எந்த குறுஞ்செய்தியாக  இருந்தாலும், சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் எந்த ஒரு இணைப்பையும் தொட வேண்டாம் அது தகவல்களைத் திருடும் இணையதளத்திற்கு உங்களை கூட்டிச்சென்று பெரிய ஆபத்தில் கொண்டு போய் சேர்த்து விடும். 
  1. *எச்சரிக்கையுடன் இருங்கள்*: சந்தேகத்திற்குரியதாகவோ அல்லது அச்சுறுத்துவதாகவோ தோன்றும் செய்தியை நீங்கள் பெற்றால், எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  1. *மோசடிகளைப் புகாரளிக்கவும்*: நீங்கள் ஒரு மோசடி செய்தியைப் பெற்றிருப்பதாக நீங்கள் நம்பினால், அல்லது அதனால் ஏமாற்றப்பட்டால் உடனடியாக உள்ளூர் காவல்நிலையம் சென்று நடந்தவற்றை கூறி புகாரளிக்கவும்.

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் இது போன்ற மோசடிகளை நிகழ்த்த மக்களின் அச்சத்தையும், அவசரத்தையும் பயன்படுத்திக் கொள்வார்கள், எனவே மக்கள் விழிப்புடன் இருந்து அவர்கள் பெரும்  அசாதாரண செய்திகள் அல்லது கோரிக்கைகளை சரிபார்க்க வேண்டியது அவசியம்.