தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு குழந்தைகள் நல மையம், அரசு பள்ளிகள், சிறுவர் பள்ளிகளுக்கு பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து காளியப்பன் முட்டைகளை எடுத்து சென்று வினியோகம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பயணப்படி வழங்க கோரி உரிய ரசீதுகளுடன் காளியப்பன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலரான நாகராஜன் பயணப்படியை வழங்க 4000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் காளியப்பனை கையும், களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த தர்மபுரி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நாகராஜனுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.