கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுபாறை பகுதியில் டேவிட் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடையால் கிராம நிர்வாக அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிலம் இருக்கிறது. இது தொடர்பாக டேவிட் தாசுக்கும், வனத்துறையினருக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு டேவிட் தாஸுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் டேவிட் தாஸ் சம்பந்தப்பட்ட நிலத்தில் இருந்த ரப்பர் மரங்களை வெட்டி லாரியில் ஏற்றி கொண்டிருந்தார்.

அப்போது வனத்துறையினர் ரப்பர் மரத்தடியை லாரியுடன் சேர்த்து பறிமுதல் செய்தனர். இதனால் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வனத்துறை முதன்மை செயலாளரிடம் டேவிட் தாஸ் புகார் அளித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனத்துறையினர் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை அறிக்கையின் நகலை கேட்டு டேவிட் தாஸ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குமரி மாவட்ட வனத்துறை பொது தகவல் அதிகாரியிடம் விண்ணப்பித்தார்.

ஆனால் விசாரணை அறிக்கை நகல் வழங்கப்படாததால் டேவிட் தாஸ் தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்தார். இதனைத் தொடர்ந்து வனத்துறை பொது தகவல் அதிகாரி டேவிட் தாஸுக்கு சம்பந்தமில்லாத தகவல்களை வழங்கியதாக தெரிகிறது. இதனால் அதே இணையத்தில் டேவிட் தாஸ் மீண்டும் மேல்முறையீடு செய்தார். எனவே தமிழ்நாடு தகவல் ஆணையம் வன அதிகாரியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி வன அலுவலர் அலுவலகத்தில் வேலை பார்த்த பொது தகவல் அதிகாரிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம் டேவிட் தாஸுக்கு வழங்கப்பட்டது. மேலும் விசாரணை நகலும் ஒப்படைக்கப்பட்டது.