பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு மாரியம்மன் கோவில் தெற்கு தெருவில் நல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் தில்சன் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சம்பூரணத்திற்கு கடந்த நான்காம் தேதி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் மூன்று அழகான ஆண் குழந்தைகள் பிறந்தது.

நேற்று முன்தினம் மதியம் 3 ஆண் குழந்தைகளை தூக்கிக்கொண்டு கணவன், மனைவி இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். இது குறித்து நல்லப்பன் கூறியதாவது, எனது மனைவிக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. ஏற்கனவே ஒரு ஆண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் மேலும் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. நான் காய்கறி கடையில் கூலி வேலைக்கு சென்று வருகிறேன்.

அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குழந்தைகளை வளர்த்து படிக்க வைப்பது கஷ்டம். எனவே குழந்தைகளை வளர்த்து படிக்க வைக்கவும் ஏதாவது தொழில் தொடங்க அல்லது கறவை மாடு வாங்க கடனுதவி வழங்க மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என நல்லப்பன் தெரிவித்துள்ளார்.