
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் டீ குடிக்க அழைத்த உறவுக்கார வாலிபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிச்சி தெருவைச் சேர்ந்த ராகுலுக்கு (20) தனது உறவினர்களான பிரபு மற்றும் காயத்ரி தம்பதியுடன் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், டேம்ஸ் சாலையில் ராகுல் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது பிரபு, காயத்திரி தம்பதி அந்த பகுதியில் நடந்து சென்றனர்.
உடனே ராகுல் இருவரையும் டீ குடிக்க அழைத்துள்ளார். உடனே “நாங்கள் பிச்சைக்காரர்களா?” என கேட்டு தம்பதி, வழியில் கிடந்த காலி பீர் பாட்டிலால் ராகுலின் தலையில் தாக்கினர். இதில் ராகுல் ரத்த காயங்களுடன் கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனே ராகுலை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் அளித்த புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, பிரபு மற்றும் காயத்ரியை கைது செய்தனர். போலீசார் கொலை முயற்சி வழக்கின் கீழ் தம்பதியரை விசாரித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தியதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.