
பாலிசிபஜார் நிறுவனத்தின் விளம்பரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அன்று இந்தியா vs பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன் டிராபி போட்டியின் இடையே ஒளிபரப்பப்பட்ட இந்த விளம்பரத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தின் பொருளாதார சிக்கல்களை பற்றி வருத்தம் தெரிவிக்கிறார். அதில் நான் பள்ளி கட்டணத்தை எப்படி செலுத்துவேன்? வீட்டு செலவுகள் இருக்கின்றன என்று கூறி மறைந்த கணவரை குற்றம் சாட்டுகிறார். மேலும் நீ வாழ்க்கை காப்பீடு எதுவும் எடுக்காமல் போயிட்ட என்று அந்த பெண் கூறுகிறார்.
வாழ்க்கை காப்பீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்பிய பாலிசிபஜார் இந்த விளம்பரத்தின் மூலம் மக்கள் மனதை பாதிக்க முற்பட்டது. இது சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. அதில் ஒரு மனிதன் இறந்துவிட்டார், ஆனால் அவன் மனைவி முதலில் செய்யும் விஷயம் அவனை குற்றம் சாட்டுவதா? இது பொருளாதார விழிப்புணர்வு அல்ல. உணர்வு பொறுப்பின்றி செய்யப்பட்ட விளம்பரம் தான் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
விளம்பரத்தில் காணப்படும் உணர்வுபூர்வமான தருணங்கள் ஒரு வணிகத் தயாரிப்பை விளம்பரம் செய்ய பயன்படுத்தப்பட்டதாக கருதப்பட்டுள்ளன. இதனால் பலரும் இந்த விளம்பரத்தை உடனே நீக்கி உணர்வுகளை கௌரவிக்கும் புதிய விளம்பரத்தை வெளியிடுங்கள் என்று பாலிசிபஜாரை வலியுறுத்தியுள்ளனர். ஒரு குடும்பத்தின் துயரத்தை விளம்பர விற்பனைக்காக பயன்படுத்துவது முறையாக இல்லை என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.