கன்னியாகுமரியில் இருந்து கனரக லாரி ரயில் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி டி.வி.எஸ் நகர் நான்கு வழிச்சாலையில் சென்றபோது டீசல் இல்லாமல் நடுவழியில் நின்றது. அதே நேரம் விருதுநகர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் கன்னியாகுமரி சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு ஒரு பேருந்தில் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அந்த பேருந்தை முனியசாமி என்பவர் ஓட்டி சென்றார். கிளீனராக வீர செல்வம் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 2 மணி அளவில் டி.வி.எஸ் நகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது கனரக லாரியின் பின்புறம் தனியார் பேருந்து மோதியது. இந்த விபத்தில் முனியசாமி, வீரச்செல்வம் மாணவிகளான அன்னை தெரசா, பொன்மலர், சுமித்ரா, சாந்தி உட்பட 15 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறிதளவு காயம் ஏற்பட்ட 12 மாணவிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனால் சுமித்ரா, முனியசாமி, வீரசெல்வம் ஆகிய மூன்று பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்