நம்மில் பலருக்கு காலையில் காபி குடித்தால் தான் அன்றைய பொழுது விடியும். ஆனால், நீங்கள் சில குறிப்பிட்ட நோய்களுக்காக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர் என்றால், அந்த காபி பழக்கம் உங்கள் உயிருக்கே உலை வைத்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான மாத்திரைகளை உட்கொள்வோர் காபி குடித்தால், அதில் உள்ள காஃபின் மருந்துக்கு எதிராகச் செயல்பட்டு ரத்த அழுத்தத்தை திடீரென உயர்த்திவிடும். அதேபோல், பாராசிட்டமால் போன்ற வலி நிவாரணிகளைப் பயன்படுத்தும் போது காபி குடிப்பது வயிற்றுப் புண் மற்றும் இதய அழுத்தத்தை ஏற்படுத்தும்.
சளி மற்றும் காய்ச்சல் மருந்துகளில் உள்ள ‘சூடோஎஃபெட்ரின்’ காபியுடன் சேரும்போது உடலில் நடுக்கம், தலைவலி மற்றும் தூக்கமின்மையை உண்டாக்குகிறது. தைராய்டு நோயாளிகள் மாத்திரை போடுவதற்கு முன்பு காபி குடித்தால், அந்த மருந்து உடலில் உறிஞ்சப்படும் அளவை 50 சதவீதம் வரை குறைத்துவிடும்.
மன அழுத்தத்திற்கான ஆன்டி-டிப்ரஸன்ட் மருந்துகள் காபியுடன் வினைபுரிந்து தலைச்சுற்றல் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, எந்த மருந்தாக இருந்தாலும் காபி குடிப்பதற்கும் மருந்து போடுவதற்கும் இடையே குறைந்தது 2 முதல் 3 மணிநேரம் இடைவெளி விடுவதே பாதுகாப்பானது.
