மும்பை அருகே பத்லாபூர் பகுதியில் நான்கு வயது சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் பின்னர், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அக்சய் ஷிண்டே எனும் குற்றவாளி, போலீஸ் காவலில் இருந்தபோது தப்பியோட முயன்றார்.

விசாரணைக்காக போலீசாரால் அழைத்து வரப்பட்ட போது, கான்ஸ்டபிளின் துப்பாக்கியை பிடுங்கி தப்பியோட முயன்ற ஷிண்டே, போலீசாரை நோக்கி சுடத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்த, ஷிண்டே படுகாயமடைந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர். இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, நெருக்கடியான சட்ட-ஒழுங்கு சூழலையும் உருவாக்கியுள்ளது.