சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக  கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியுள்ளார். அதன் பின் அமைச்சர் பெரிய கருப்பன் கூறியதாவது, முதலமைச்சர் முயற்சியினால் வரலாற்று சிறப்பு அம்சங்களை வெளிக்கொணரும் விதமாகவும்  சங்க காலத்தில் தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதையும் அதிலும் குறிப்பாக எழுத்தறிவு மிக்கவர்களாக திகழ்ந்துள்ளனர் என்பதை  இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதமாக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு உலக அளவில் தமிழின் பழமையை தமிழின் புகழை பறைசாற்றும் விதமாக  பெருமை சேர்த்து வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக அகழாய்வு பணிகள் எட்டு கட்டமாக கீழடி பகுதியில் நடைபெற்று உள்ளது.

மேற்கண்ட பணிகளின் போது கிடைக்கப்பெற்ற நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு விதமான தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கும் வசதியாக அதன் பெருமையை உலக அளவில் பறைசாற்றும் விதமாகவும் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.42 கோடியில் புதிய அகழ் வைப்பக கட்டிடம் கட்டப்பட்டு தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தை மேலும் பெருமை சேர்க்கும் விதமாக புதிதாக கீழடி அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. இதனை வருகிற ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் நேரடியாக வந்து திறந்து வைக்க இருக்கிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என கூறியுள்ளார்.