சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்ததில், பயணிகளை சென்னை விமான நிலையத்தின் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி மீது அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். உடனே அதிகாரிகள் அவரது உடைமைகளை
சோதனை செய்து பார்த்ததில், அவர் வைத்திருந்த கூடையில் ஏதோ ஒரு உயிருள்ள பொருள் அசைவது போல தெரிந்தது. உடனே அதிகாரிகள் அந்த கூடையை  திறந்து பார்த்தபோது அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பது தெரியவந்தது.

அதில் தென் ஆப்பிரிக்கா, வட அர்ஜெண்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள வனப்பகுதியில் வாழும் அபூர்வ வகையை சேர்ந்த 4 சிறிய தேகு பல்லிகள், வடஅமெரிக்கா பகுதிகளில் வசிக்கும் அரிய வகை குள்ளநரி வகையை சேர்ந்த ரக்கூன் குட்டி ஆகியவை இருந்தது. இதை பார்த்து  அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை நடத்தியதில், அவை அபூர்வ வகை குட்டிகள் என்பதால் அவற்றை வீட்டில் வளர்க்க எடுத்து வந்ததாக கூறினார். ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து அவற்றுக்கு நோய் கிருமிகள் உள்ளதா என்பதற்கான சான்றிதழ் எதுவும் அவரிடம் இல்லாததால் 4 பல்லிகள், 1 ரக்கூன் குட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சோதனை செய்து பார்த்து உறுதியானதையடுத்து, மீண்டும் மலேசிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.