தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வியை தேர்வு செய்து, படிப்பில் ஆர்வத்தை தூண்டும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் களப்பணி என்று கல்வித்துறை அதற்கு பெயரிட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களை அருகில் இருக்கும் கல்லூரிகளுக்கு அழைத்து சென்று மேற்படிப்பு தொடர்பான விளக்கங்கள் மற்றும் கல்லூரி வளாகம், அதன் செயல்பாடுகள், வகுப்பறைகள், கலையரங்கம், நூலகங்கள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை சுற்றி காண்பிக்கும் வகையில் கல்லூரி சுற்றுலா என்ற பெயரில் அழைத்துச் செல்ல பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சென்னையில் ஒவ்வொரு அரசு பள்ளியில் படிக்கும் சுமார் 10 முதல் 15 மாணவர்களை தேர்ந்தெடுத்து, 2 ஆசிரியர்கள் அவர்களை வழிநடத்தி இந்த கல்லூரி சுற்றுலா செல்கின்றனர்.
இதுவரை சென்னையில் மட்டும் மொத்தம் 56 அரசு பள்ளிகளில் இருந்து சுமார் 600 மாணவர்கள் இந்த கல்லூரி சுற்றுலாவில் பங்கேற்று பயன்பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து பயன் அடைந்த மாணவிகள் காவியா காமேஸ்வரி மற்றும் நிவேதா கூறியுள்ளதாவது, ‘இது மிகவும் பயனுள்ளதாகவும், உயர்கல்வி படிப்புகள் பற்றிய தெளிவு எங்களுக்கு கிடைத்தது. ஒவ்வொரு படிப்பையும் தேர்வு செய்வது பற்றியும் எந்த படிப்புகளை படித்தால் வேலை கிடைக்கும்? என்றும் எடுத்துக் கூறினார்கள்’ என்றனர்.