சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பலூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட போது நிலங்களுக்கா போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.20 கோடியே 52 லட்சம் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.  இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் வழக்குகளை பதிவு செய்து 15 பேரை கைது செய்துள்ளனர். மேலும் புலன்விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு  கடந்த முறை நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது சிபி சிஐடி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர். சிபிசிஐடி அதிகாரிகள் மந்தமான முறையில் செயல்படுவதாக நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார். நத்தை வேகத்தில் செயல்பட்டால் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற நீதிமன்றம் தயங்காது எனவும் குறிப்பிட்டு இருந்தார். சரியான திசையில் திறமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு இறுதி வாய்ப்பாக ஒரு வார காலம் அவகாசம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி சிபிசிஐடி போலீசாரின்  விசாரணை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் இந்த வழக்கில் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசிடம் அனுமதி கேட்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என நீதிபதி உறுதியளித்துள்ளார். இதனை பதிவு செய்து கொண்டு நீதிபதி வருகிற மார்ச் 29-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.