சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மலேசியாவில்
இருந்து வந்த சென்னை சேர்ந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணாக பேசினார். உடனே அதிகாரிகள் அந்த வாலிபரின் உடைமைகளை சோதனை செய்து பார்த்தனர்.

அப்போது அதில் மிக்சி, கிரைண்டர் இருந்தது. பின் அதை சந்தேகத்தின் பேரில் கழற்றி சோதனை செய்து பார்த்ததில், கிரைண்டரின் உள்ளே தங்கத்தை வளைய வடிவத்தில் மாற்றி மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 1 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 200 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதேபோல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபர் ஒருவரின் டிராலி சூட்கேசை சோதனை செய்ததில்,தங்கத்தை கம்பி போல் மறைத்து கடத்தி வந்துள்ளார். பின் அவரிடம் இருந்து 19 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 383 கிராம் தங்கம் அதிகாரிகளால் கைப்பற்றபட்டது . மேலும் துபாயில் இருந்து சென்னைக்கு வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் டிராலி சூட்கேசில் தங்க கம்பிகளை மறைத்து வைக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதையடுத்து அவரிடமிருந்து 70 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 370 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். இவ்வாறு நேற்று ஒரே நாளில் மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் வந்த 3 பேரை சோதனை செய்ததில், 2 கோடியே 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து, கடத்தலின் பின்னணியில் உள்ளவர்களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.