டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் இருக்கிறது என்று மத்திய பாஜக அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அதற்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது. இந்நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள பாஜக இல்லாத மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் மற்றும் எதிர்கட்சிகளை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலினை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசுவேன். டெல்லியில் உள்ள மாடல் பள்ளிகள் போன்று தமிழகத்திலும் தொடங்க வேண்டும் என்று ஆய்வு செய்தோம். ஆளுநர் மூலமாக டெல்லி அரசுக்கு தொடர்ந்து பாஜக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. எனவே டெல்லி அரசுக்கு அனைத்து மாநில முதல்வர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்தை திமுக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று கூறினார்.