
இந்தியாவில் பல்வேறு இடங்களில் தசரா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ராவணனின் உருவ பொம்மையை எரித்து துஷ்ட சக்திகளை அகற்றுவது வழக்கமாகும். ஆனால் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பிஸ்ராக் என்ற கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ராவணனின் இறப்பை துக்க நாளாக அனுசரிக்கின்றனர்.
ராவணன் பிஸ்ரா கிராமத்தை சேர்ந்தவர்.இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் ராவணன் வம்சாவளியை கொண்டவர்கள் எனவும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ராவணனின் அறிவுத்திறனும், அவர் சிவனின் ஆத்மார்த்தமான பக்தர் என்பதையும் பெருமையாக போற்றுகின்றனர். இந்த கிராம மக்கள் தசரா திருவிழாவினை கொண்டாடுவது தங்களது கிராமத்திற்கு துரதிஷ்டத்தை அளிக்கும் என நம்புகின்றனர்.
மேலும் இவ் ஊரில் உள்ள சிவன் கோவில் ராவணன் மற்றும் அவரது மூதாதையர்கள் வழிபட்ட கோவிலாக கருதுகின்றனர். இதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அருகே உள்ள மாந்தூரில் வாழும் மக்கள் தங்களை ராவணனின் வம்சாவளியை சார்ந்தவர்கள் என நம்புகிறார்கள். இதனால் அங்கு ராவணனுக்கு கோவில்கள் உள்ளன. ராவணனை அவ்வூர் மக்கள் வழிபட்டும் வருகின்றனர்.
ராமாயணத்தின் படி ராவணன் இலங்கையை சேர்ந்தவர் என்றாயினும், ஒவ்வொரு ஊர்களிலும் ராமாயணக் கதை வெவ்வேறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் உத்திர பிரதேச மாநிலம் கான்பூர், மத்திய பிரதேச மாநிலத்தில் விதிஷா மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் ராவணனுக்கு கோவில்கள் உள்ளது.