கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடந்த 3 நாள் மாநாட்டில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமைச் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் கலந்து கொண்டார். இதில் அவர் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசினார். இது மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சனை, நமது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு முக்கியமானது. இது நமது சமூகங்கள் மற்றும் சாதிகளின் நலனை பற்றி பேசுவதாக இருக்க வேண்டும். அரசியல் கருவியாகவோ, தேர்தல் பிரச்சாரத்திற்காகவோ பயன்படுத்தக் கூடாது என்று எச்சரித்தனர்.
இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, சாதிவாரி கணக்கு எடுப்பு ஆதரவா அல்லது எதிராக உள்ளதா என்பதை குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார். அதோடு நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு பதிலாக மனுஸ்மிருதிக்கு ஆதரவாக செயல்படும் சங்கரிவார், தலித்துக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழை சமூகத்தின் பங்கேற்பை பற்றி கவலைப்படுகிறதா என்ற கேள்வியும் எழுப்பினார்.