நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் சீமான் வன்முறையை தூண்டும் விதமாக பேசுவதாக குற்றச்சாட்டு இருந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு சீமான் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த 23-ஆம் தேதி திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இதே போன்ற ஒரு கூட்டணியை உருவாக்கிய போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததால் அந்தக் கூட்டணி சிதறுண்டு போனது என்று கூறினார். அதே நாளில் நடந்த ஒரு போராட்டத்தின் போது சீமான் வன்முறையை தூண்டும் விதமாகவும், அவதூறாக பேசியதாகவும் கூறி சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் 500 பேர் மீது காண்டோண்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சீமான் பொதுவெளியில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசுவது அறிவாலயத்திற்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நாம் தமிழர் கட்சிக்கு அதிகமாக இளைஞர்கள் செல்வதால் இளைய தலைமுறையினர் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அச்சம் திராவிட கட்சிகளுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தொடர்ந்து திராவிட கட்சிகளை தாக்கி பேசி வரும் சீமானை கைது செய்து சிறையில் அடைத்தால் என்னவென்று மேலிடத்தில் யோசித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதனால் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற எண்ணம் எழுந்துள்ளதால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.