சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது நண்பர்களான சண்முகம், செந்தில்குமார் ஆகியோருடன் பெரம்பலூரில் நடைபெற்ற நண்பரின் திருமண விழாவில் கலந்து கொண்டார். பின்னர் காரில் 3 பேரும் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கனூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது நாட்டு சர்க்கரை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்த லாரியின் பின்புறம் செந்தில்குமாரின் கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக், சண்முகம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயமடைந்த செந்தில் குமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த 2 பேரின் உடல்களும் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.