கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லாங்குப்பம் ரயில்வே கேட்டை திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்றது. இந்நிலையில் ரயிலுக்காக மூடப்பட்ட கேட்டை கீப்பர் அழகர் செல்வம் என்பவர் திறந்துள்ளார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அழகர் செல்வம் உடனடியாக திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதே நேரத்தில் விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில் தண்டவாள விரிசல் காரணமாக திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தற்காலிகமாக தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ததால் 45 நிமிடங்கள் தாமதமாக மயிலாடுதுறை பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது.

அதன் பின்னர் விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை அகற்றி ஊழியர்கள் புதிய தண்டவாளத்தை அமைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டதால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதா? அல்லது வேறு யாராவது நாச வேலையில் ஈடுபட்டனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விரிசல் ஏற்பட்ட தண்டவாள இரும்பு பகுதி ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.