கர்நாடக மாநிலம் பெங்களூருவின் இதயப் பகுதியான எம்.ஜி. ரோடு அருகே லாவல்லி ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலிக்குச் சொந்தமான ‘ஒன்8 கம் யூன்’ உணவகம் தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2025) இந்த உணவகத்தில் தீ பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதில் இருந்தே சிக்கல்கள் தொடங்கின.
இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, விராட் கோலி அந்த நிறுவனத்தில் இருந்து விலகியதோடு, தனது பிராண்ட் பெயரான ‘ஒன்8’ என்பதையும் நீக்க உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
விராட் கோலியின் பெயர் நீக்கப்பட்ட பிறகு, அந்த உணவகத்தின் வணிகம் அதலபாதாளத்திற்குச் சரிந்தது. வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, கட்டிட வாடகை மற்றும் பராமரிப்புக் கட்டணங்களைச் செலுத்த முடியாத நிலை உருவானது. ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத சூழலில், கட்டிட உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நிலுவைத் தொகையைச் செலுத்தும் வரை வளாகத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அந்த உணவகம் தற்போது இழுத்து மூடப்பட்டுள்ளது. பெங்களூருவின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த இந்த உணவகம் மூடப்பட்டது வாடிக்கையாளர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
