சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது, கழக தலைவன் நன்றாக இருக்கிறதா என்று கேட்கும் முதல்வர் என்றைக்காவது ஒப்பந்த செவிலியர்கள் நலமுடன் இருக்கிறார்களா என்று கேட்டிருக்கிறாரா?. 2 1/2 வருடங்களாக வேலை வாங்கிவிட்டு இப்போது பணியில் இருந்து நீக்கியது சரியா?. அதோடு கடந்த 6 மாத காலமாக ஒப்பந்தத்த செவிலியர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை. நீதிமன்றம் கூட ஒப்பந்த சேவிலியர்களை முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டம் நடத்திய கனிமொழி எம்பி தற்போது எங்கே போனார் என்று கூறினார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் பேசியதாவது, செவிலியர்கள் உடுத்தியுள்ள கவச ஆடைகளை தற்போது இருக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனால் உடுத்த முடியுமா? ஒருவேளை செவிலியர்கள் அணியும் கவச உடையை 8 மணி நேரம் அல்லது 12 மணி நேரம் சுகாதாரத்துறை அமைச்சர் உடுத்தி கழிப்பிடம் செல்லாமல் பணியாற்றினால் தற்போது ஆட்சி செய்து வரும் அரசு என்ன கூறினாலும் அதை அப்படியே தட்டாமல் கேட்டுக்கொள்கிறேன் என்றார். மேலும் சட்டசபை கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி செவிலியர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக குரல் கொடுப்பார் என்றும் கூறினார்.