அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்திய குறும்படமான The Elephant Whisperers என்ற திரைப்படம் ஆஸ்கரை வென்றது. அதன் பிறகு தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்தது. இசையமைப்பாளர் கீரவாணியும் பாடல் ஆசிரியர் சந்திரபோஸும் விருதை பெற்றுக் கொண்டனர். இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானுக்கு பிறகு ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் என்ற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார்.

ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்கர் விருதினை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல் ஆர்ஆர்ஆர் படத்தினை பாலிவுட் படம் என அழைத்தார். இது தற்போது பெரும் சர்ச்சையாக  மாறியுள்ளது.  இதற்கு தென்னிந்திய ரசிகர்கள் பலரும் ஜிம்மி கிம்மலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில் ஒரு காலத்தில் இந்தி படங்கள் தான் இந்திய படங்கள் என்ற நிலை இருந்த நிலையில் தற்போது அது மாறி தென்னிந்திய திரைப்படங்கள் என்ற நிலை வந்துள்ளது.

இப்படி இருக்கையில் தெலுங்கில் உருவான இந்திய திரைப்படமான ஆர்ஆர்ஆர் படத்தை ஜிம்மி கிம்மல் பாலிவுட் படம் என அழைத்தது தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்ட தீபிகா படுகோனே ஆர்ஆர்ஆர் படத்தை தெலுங்கில் உருவான இந்திய திரைப்படம் என்றே அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.