சென்னையில் கல்லூரிகள் திறப்பதை முன்னிட்டு மாணவர்கள் பஸ் டே கொண்டாடினார். குறிப்பாக பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் சாலையில் நடந்து சென்று பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோன்று புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள டோல்கேட் அருகே சில மாணவர்கள் கூட்டமாக நின்றனர். அப்போது வண்ணார்பேட்டை காவல்துறையினர் கூட்டமாக நின்ற மாணவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது சில மாணவர்கள் தப்பி ஓடிய நிலையில் அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் சோதனை நடத்தியதில் பட்டாகத்தி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து 4 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்படி இசக்கி (20), பாலாஜி (19), ஜனகன் (19), குணா (20) ஆகிய 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த மாணவர்கள் மாநிலக்கல்லூரியில் படித்து வரும் நிலையில் முதல் நாள் என்பதால் பஸ்டே தினத்தை கொண்டாட அவர்கள் வந்துள்ளனர். அப்போது கெத்து காட்டுவதற்காக தரையில் பட்டாகத்தியை தேய்க்க திட்டமிட்டு அதற்காக கத்தியை கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.