
ஜார்கண்ட் மாநிலத்தின் கோலா மாவட்டத்தில் உள்ள லகுடி கிராமத்தில், ஒரு குடும்பத்தில் ஒரே நாளில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்து அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 18 வயதான சத்யம் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்ததற்காக ஏற்பட்ட மன அழுத்தத்தில், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இது குறித்து குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளிக்க, அவர்கள் சத்யமின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சத்யமின் மரணத்தில் மனம் உடைந்த அவரது மூத்த சகோதரர் சந்தீப் (வயது 25), மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அதே இரவில், தம்பி தற்கொலை செய்த அறையில், சந்தீப்பும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
திங்கட்கிழமை காலை இந்த தகவல் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. கோலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சத்யம் மற்றும் சந்தீப் ஆகியோரின் தற்கொலைகள் குறித்த அதிர்ச்சி இன்னும் ஆறாத நிலையில், குடும்பத்தில் உள்ள இளைய மகள் ரியாவின் திருமணம் மூன்று நாட்களுக்குள் நடைபெற இருந்த நிலையில், தற்போது அந்த வீட்டில் திருமணத்திற்குப் பதிலாக துக்கம் சூழ்ந்துள்ளது.
இந்த இரட்டை தற்கொலை சம்பவங்கள் குறித்து இதுவரை யாரும் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கவில்லை என தெற்கு கோலா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் தெரிவித்துள்ளார். போலீசார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.