நடிகை திரிஷா குறித்து அவருடன் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் வெளியிட்ட கருத்து அவதூறாக இருப்பதாக பெருமளவில் சர்சை கிளம்பியது. இந்த நிலையில் திரிஷாவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்திருந்தனர்.

இதற்கிடையில் திரிஷாவுக்கு எதிராக பேசிய மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என்ற முறையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியிடம் குஷ்பு புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்பதாக மன்சூர் அலிகான் கேட்டிருந்தார். நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதால் அந்த சம்பவத்தை மறந்து விடுவதாக திரிஷாவும் தெரிவித்து இருந்தார்.  திரிஷாவுக்கு ஆதரவாக சிரஞ்சீவியும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக  வழக்கு தொடர்வேன் என்று விசாரணைக்கு ஆஜராகி வெளியே வந்த மன்சூர் அலிகான் தெரிவித்து  இருந்தார்.  அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவருக்கு எதிராகவும் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கில் மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் , 3 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். தான் பேசிய வீடியோவை முழுமையாக பார்காமல்…  கருத்துக்களை முழுமையாக கேட்காமல் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதால்,  தனக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு  மான நஷ்ட ஈடாக தலா  ஒரு கோடி ரூபாய் என 3 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.