டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன், கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கியுள்ளனர். தனிமனித உரிமை எங்கே போனது என டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுகிறது. தனிநபர் விதிமுறைகளுக்காக நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது? எஃப் ஐ ஆர் பதியப்பட்ட பிறகு அமலாக்க துறைக்கு அங்கு என்ன வேலை? கூட்டாட்சி அமைப்பையே அமலாக்கத்துறை சிதைத்துள்ளது என கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து திமுக எம் பி, என்.ஆர் இளங்கோ கூறியதாவது டாஸ்மாக் ஊழியர்கள் மீது பதியப்பட்ட 47 வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தகுந்த விளக்கத்தை கொடுத்து வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு விட்டனர். சில வழக்குகள் விடுதலையுமாகி இருக்கின்றன.

இதையெல்லாம் வைத்துக்கொண்டு டாஸ்மாக் நிறுவனத்திற்கு உள்ளேயே சென்று அமலாக்குத்துறை சோதனை செய்வது முறையற்றது என்று தெரிவித்தார். மேலும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி இருக்கிறார்கள், கூட்டாட்சி என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை தத்துவத்தையே மீறி இருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக இந்த சட்டத்தை மீறி செயல்பட்டு இருக்கிறார்கள் .எனவே தான் உச்ச நீதிமன்றம் நீங்கள் எல்லை மீறி சென்று  கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லி இருக்கின்றது என்று தெரிவித்தார்.