நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி அமைப்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாக, முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான ஆர்.பி. உதயகுமார் அவர்கள் இன்று மீண்டும் பதிவு செய்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “அனைத்துக் கட்சிகளும் அறிவிப்பதுபோலவே, தமிழக வெற்றிக் கழகமும் தங்கள் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதை அதிமுக மதிக்கிறது” என்று தெளிவுபடுத்தினார். மேலும், வரவிருக்கும் தேர்தலைச் சந்திக்க அதிமுக தயார் நிலையில் இருப்பதாகவும், ‘மெகா கூட்டணியை’ அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிச்சயம் அமைப்பார் என்றும் அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கூட்டணி குறித்த மேலும் பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கையில், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று சூசகமான முறையில் குறிப்பிட்டுள்ளார். இந்த வார்த்தை மூலம், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் என்றும், புதிய மற்றும் பழைய கூட்டணிகள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும் என்றும், அது வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் ஆர்.பி. உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
