இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாக்கு திருட்டு தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இன்று செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது அவர் வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுத்தார். இது பற்றி அவர் கூறியதாவது, “எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தேர்தல் ஆணையத்துக்கு அனைவரும் சமம். அரசியலமைப்புச் சட்டப்படி தேர்தல் ஆணையம் தனது கடமையிலிருந்து ஒருபோதும் பின்வாங்காது” என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் தெரிவித்தார்.
முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்த்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாக பெங்களூருவில் ஒரே வீட்டு முகவரியில் 80 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை அவர் எடுத்துக்காட்டினார். இது தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்தும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. தேர்தல் ஆணையம், சுமார் 65 லட்சம் போலி வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியதாகத் தெரிவித்தது. பின்னர் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலிலும் பல்வேறு தவறுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தை அடைந்துள்ள நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர், “எதிர்க்கட்சிகளோ, ஆளுங்கட்சிகளோ என எங்களுக்குப் பாகுபாடு இல்லை. வாக்காளர் பட்டியலில் குறைகள் இருந்தால், அவற்றை தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 28,370 புகார்கள் கிடைத்துள்ளன. அனைத்துக் கட்சிகளுக்கும் குறைகளை வெளியிட உரிமை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கதவுகள் அனைவருக்கும் திறந்திருக்கும்” என கூறினார்.
“சிலர் தவறான தகவல்களை பரப்பி மக்களை திசை திருப்ப முயல்கின்றனர். ஆனால், தரை மட்டத்தில் ஒளிவுமறையில்லாத முறையில், வாக்காளர்கள், அரசியல் கட்சிகள், வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆகியோர் இணைந்து பட்டியலை சரிபார்க்கின்றனர். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலமே சட்டபூர்வமாக உருவாகின்றன என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பாரபட்சமின்றி செயல்படுவதே தேர்தல் ஆணையத்தின் நெறிமுறை. எந்தக் கட்சியின் அழுத்தத்தினாலும் எங்கள் பொறுப்பில் பின்வாங்குவதில்லை” என்றார்.
“வாக்கு திருட்டு குற்றச்சாட்டு என்பது அரசியலமைப்புக்கு எதிரானது. தேர்தல் ஆணையத்தின் நேர்மையை யாராலும் கேள்விக்குள்ளாக்க முடியாது” எனவும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
