ஏப்ரல் 10, 1934 அன்று பிறந்த லாபங் (வயது 91), வெள்ளிக்கிழமை இரவு ஷில்லாங்கில் உள்ள பெத்தானி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சாலைத் தொழிலாளி, பள்ளி துணை ஆய்வாளர் எனப் பணியைத் தொடங்கிய அவர், பின்னர் அரசியலில் நுழைந்து, 1972-ஆம் ஆண்டு நோங்போ தொகுதியில் இருந்து சுயேச்சை வேட்பாளராக சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பல அமைச்சர்பதவிகளை வகித்து, 1992 முதல் 2008 வரை நான்கு முறை மேகாலயா மாநில முதல்வராகப் பணியாற்றியவர், மாநில அரசியலில் நீண்டகாலம் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார்.

தீவிர அரசியலில் இருந்து விலகிய பின்னரும், மரியாதைக்குரிய தலைவராக இருந்த லாபங், 2024-ஆம் ஆண்டு ரி-போய் மாவட்டத்தில் அவருக்காக ஆயுள் அளவு சிலை திறக்கப்பட்டதன் மூலம் பெருமை பெற்றார். அவரது மறைவுக்கு கட்சி வேறுபாடுகள் கடந்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“தனது வேர்களை ஒருபோதும் மறக்காத தலைவர்” என்றும், “அவரது பயணம் விடாமுயற்சி, பணிவு, சேவை ஆகியவற்றின் சின்னமாக இருந்தது” என்றும் பலரும் புகழ்ந்துள்ளனர்.