மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒரு ‘டிஜிட்டல்’ புரட்சிக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் சுமார் 2,000 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட சர்தார்தாம் விடுதி வளாகத்தைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர், கோவிட்-19 காலகட்டத்தில் நாம் கடைப்பிடித்த அதே ‘ஆன்லைன்’ பாணியை இப்போது தற்காலிகமாகப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உருக்கமாகத் தெரிவித்தார்.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக இணையவழி வகுப்புகளுக்கு மாற வேண்டும் என்றும், தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு மீண்டும் ‘வீட்டிலிருந்தே வேலை’ (Work From Home) வசதியை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையைச் சுட்டிக்காட்டிய பிரதமர், “நிலைமை சீராகும் வரை நாம் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
PM Modi asks school to go online, avoid buying gold, go vocal for local & not use chemical fertilisers amid West Asia war impact. Measures aimed at conserving foreign exchange, fuel pic.twitter.com/uayqSTB2vP
— Sidhant Sibal (@sidhant) May 11, 2026
“>
நேரடி சந்திப்புகளைத் தவிர்த்து மெய்நிகர் கூட்டங்களை (Virtual Meetings) அதிகப்படுத்துவதன் மூலம் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கலாம் என்றும், இதன் மூலம் பெட்ரோல் – டீசல் நுகர்வைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பணவீக்கம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் வேளையில், குடிமக்கள் அனைவரும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும், தேவையற்ற எரிபொருள் செலவுகளைக் குறைக்கவும் பிரதமர் மோடி விடுத்துள்ள இந்த வேண்டுகோள், தேச நலன் சார்ந்த ஒரு மக்கள் இயக்கமாகப் பார்க்கப்படுகிறது.
