குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையோர 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மரப்பாலம் கெபி அருகே சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதலில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

மேலும் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் எழுந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் சிக்கிய பயணிகளில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 9வது கொண்டை ஊசி வளைவில் பேருந்து விபத்தில் சிக்கியதில் 2 பேரின் உடல்கள் அடையாளம் தெரியாத நிலையில் மீட்கப்பட்டுள்ளது. விபத்தில் நிதின், தேவி கலா, முருகேசன், முப்பிடாதி, கௌசல்யா, இளங்கோ மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் உயிரிழந்தனர்.

சுற்றுலா பேருந்து விபத்து காரணமாக கோத்தகிரி வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து வருகின்றார். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி தலைமையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. குன்னூர் மேட்டுப்பாளையம் கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளன. தென்காசி மாவட்டம் கடையம் மேலகல்யாணிபுரத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.