தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமினுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடகத்துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர் பெஞ்சமின். சேரன் இயக்கிய ‘வெற்றிக் கொடி கட்டு’ உள்ளிட்ட பல படங்களில் தனது எதார்த்தமான நகைச்சுவை நடிப்பால் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிப்பைத் தாண்டி அரசியலிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் இவர், தற்போது நடைபெற்று வரும் தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களாக சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். தற்போது நிலவி வரும் கடும் வெயில் மற்றும் போதிய ஓய்வில்லாத காரணத்தால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வாகனப் பேரணியில் கலந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. மேடையிலேயே தடுமாறி கீழே விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, இதய நோய் நிபுணர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். பரிசோதனையில் அவரது இதயத்தில் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெஞ்சமின் விரைவில் குணமடைய வேண்டுமென திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் நடிகர் விஜயின் திருப்பாச்சி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
