தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் பள்ளி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

கனமழை பெரு வெள்ளத்தால் தென் மாவட்டங்கள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. அந்த மாவட்டம் முழுமையாக வெள்ளை நீரில் மூழ்கி போயிருந்தது. தற்போது தாமிரபரணி ஆற்று வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததை தொடர்ந்து பல இடங்களில் தாழ்வான பகுதிகளில்  வீடுகளில்  இருந்த வெள்ளம் சற்று குறைய தொடங்கியுள்ளது. ஆனாலும் பல பகுதிகளில் பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த கோர வெள்ளத்தில் பலரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெள்ளம் பாதித்த அன்றைய தினமே தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.

அதிகாரிகளை நேரடியாக அங்கு சென்று மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து சிறப்பு கட்டுப்பாட்டு மையங்களும் திறக்கப்பட்டு அதற்கான பல்வேறு கட்ட பணிகள் முழுமையாக நடைபெற்று வந்தது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு என்னென்ன முயற்சிகளை முன்னெடுக்க வேண்டுமோ அனைத்தையும் உடனடியாக செய்ய வேண்டும். அதேபோல பாதிப்புக்குள்ளாகியிருந்த மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் அங்கு செய்யப்பட்டுள்ள பணிகள், மக்களுடைய இயல்பு நிலை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதெல்லாம் குறித்து மக்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்வதற்கும், அந்த பகுதிகளை பார்வையிட தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தூத்துக்குடிக்கே சென்றுள்ளார். சென்னையிலிருந்து தூத்துக்குடி விமான நிலையத்தை சென்றடைந்த நிலையில், தூத்துக்குடி மில்லர்புரம் செயின்ட் மேரிஸ்பள்ளி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின் உடன் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன்  மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் முதல்வர் ஸ்டாலின். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். புனித மரியன்னை பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். பிஸ்கட், தண்ணீர், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ய உள்ளார். மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அறிந்து அதிகாரிகள் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அடுத்த கட்டமாக மக்களுக்கு தேவையான என்னென்ன வசதிகள் செய்து கொடுத்துள்ளார்கள் என கேட்டறிவார். முன்னதாக சென்னை  தலைமை செயலகத்தில் அதிகாரி உடன் ஆலோசனை நடத்தி வந்தார் முதல்வர் ஸ்டாலின்.. தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லைக்கும் செல்லவுள்ளார்..