தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (TVK) 108 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மாய இலக்கை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகின்றன. நடப்புத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளைப் பின்னுக்குத் தள்ளி தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், மேஜிக் நம்பரை (118) தொட முடியாததால், சிறிய கட்சிகள் அல்லது பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது தவெக-வுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. அதன்படி மிரட்டலான வெற்றியைப் பதிவு செய்துள்ள தவெக, சிறிய கட்சிகளைத் தன் பக்கம் இழுக்க முயற்சி செய்யலாம். தேர்தலுக்கு முந்தைய சூழலில் பரஸ்பர விமர்சனங்கள் குறைவாக இருந்த நிலையில், அதிமுக தவெக-வுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்குமா அல்லது அதிகாரப் பகிர்வு அடிப்படையில் கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னையை ஒட்டுமொத்தமாகத் தனது வசப்படுத்தியுள்ள தவெக, அடுத்த சில மணிநேரங்களில் தனது ஆதரவு நிலைப்பாட்டை அறிவிக்கக்கூடும் எனத் தெரிகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் சிறிய கட்சிகளின் முக்கியத்துவம் இப்போது அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் அடுத்த சில நாட்களுக்குப் பெரும் பரபரப்பில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
