தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. நேற்று முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்று கொண்ட நிலையில் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.திருச்சி கிழக்கு தொகுதியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று முதலமைச்சராக பதவி ஏற்கும் போது ஆண்டவன் மீது ஆணையிட்டு என்று கூறிய விஜய் இன்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கும் போது உளமாற உறுதி ஏற்கிறேன் என்றார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் பொறுப்பேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். மேலும் இதன் மூலம் அவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுகிறார் என்பது உறுதியாகியுள்ளது..
