தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள படுகொலை சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் விவாதத்திற்கு வந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சட்டப்பேரவையில் இதுகுறித்து விரிவாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின், கடந்த ஒரு வாரக் காலத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தச் சம்பவம் குறித்து அவர் பேசுகையில், “அமுதன் கொலை எந்தவிதமான கோஷ்டி மோதலும் கிடையாது. போதைப்பொருள் கும்பல் குறித்த ரகசியத் தகவலைத் தெரிவித்த காரணத்தினால்தான் அந்த மாணவன் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளான்” என்று குற்றம் சாட்டினார். மேலும், கோவையோடு நின்றுவிடாமல் மற்ற மாவட்டங்களிலும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “சென்னை திருவொற்றியூரில் பள்ளி மாணவர் தனுஷ் 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் போதை கும்பலைத் தட்டிக் கேட்டதற்காக 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

 

கோவை மாணவன் அமுதன் கொலையை ஒரு தனிப்பட்ட சம்பவமாகவோ அல்லது சாதாரண கோஷ்டி பூசலாகவோ அரசாங்கம் கடந்து சென்றுவிட முடியாது என்று எச்சரித்த அவர், அரசின் தொடர் அலட்சியமும் காவல்துறையின் பொறுப்பற்ற போக்கும் தான் இதுபோன்ற கொலைகளுக்கு முக்கியக் காரணம் என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் சமரசமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து விளக்கிப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், அமுதன் கொலைக்கும் போதைப்பொருள் விவகாரத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று மறுத்தார். முன்விரோதம் மற்றும் கோஷ்டி மோதல்களே அந்த மாணவனின் துயரமான மரணத்திற்கு அடிப்படைக் காரணம் என அரசு தரப்பு விளக்கத்தை அவர் சட்டப்பேரவையில் சமர்ப்பித்தார்.