
இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற டிடி தமிழ் ஹிந்தி கொண்டாட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒளிபரப்பப்பட்ட போது அதில் திராவிட நல் திருநாடும் என்ற வரி மட்டும் விடுபட்டுவிட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோரும் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு தமிழ்த்தாய் வாழ்த்தையும் தமிழக மக்களையும் அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது. அதில் தமிழ் தாய் வாழ்த்து திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தை விடுபட்டதிற்கும் ஆளுநருக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. இது பாடல் ஒலிபரப்பப்பட்டதில் தான் தவறு. இது உடனடியாக விழா ஏற்பாட்டுள்ளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு ஆளுநர் ரவிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மேலும் ஆளுநர் ரவி தமிழ்நாடு மீதும் தமிழக மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்று விளக்கம் கொடுத்துள்ளது. அதோடு இந்த சம்பவத்திற்கு மன்னிப்பும் கோரியுள்ளது.