தமிழகத்தில் விஜய் தலைமையில் ஆன தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில்  முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், டாக்டர் பிரபு, கீர்த்தனா, வெங்கட்ரமணன், அருண் ராஜ், ராஜ்மோகன் உள்ளிட்ட ஒன்பது பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது 23 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கிறார்கள். மேலும் புதுமுகங்கள் பலருக்கு தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ள நிலையில் இன்று மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் தற்போது ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் மற்றும் மதுரை மேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோர் தற்போது அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும் இதன் மூலம் தமிழ்நாட்டில் 74 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.