தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு (Exit Poll) முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழக தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்த முறை 84.69 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பீப்பிள்ஸ் பல்ஸ் (People’s Pulse) மற்றும் சாணக்கியா ஆகிய நிறுவனங்களின் கணிப்புப்படி, திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பீப்பிள்ஸ் பல்ஸ் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 125 முதல் 145 இடங்களும், சாணக்கியா கணிப்பில் 145 முதல் 160 இடங்களும் கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி (Agni) நிறுவனம் திமுக கூட்டணிக்கு அதிகபட்சமாக 169 இடங்களை ஒதுக்கியுள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மேட்ரீக்ஸ் (Matrize) நிறுவனம் 87 முதல் 100 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வோட் வைப் (Vote Vibe) நிறுவனத்தின் கணிப்பு மற்ற நிறுவனங்களிடமிருந்து மாறுபட்டு, அதிமுக கூட்டணிக்கு 114 முதல் 124 இடங்கள் வரை கிடைத்து ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக அதிரடியான முடிவை வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெறும் எனத் தெரியவந்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் கணிப்பில் தவெக 18 முதல் 24 சதவீத வாக்குகள் வரை பெறக்கூடும் என்றும், சாணக்கியா கணிப்பில் அந்த கட்சிக்கு 13 முதல் 18 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சிக்கு (நாதக) 1 முதல் 8 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகப் பல்வேறு கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டப்போவது யார் என்பது வரும் மே 4-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.

நிறுவனங்கள் வாரியாகத் தொகுதிகள் கணிப்பு (அட்டவணை):

நிறுவனம் திமுக+ அதிமுக+ தவெக நாதக
பீப்பிள்ஸ் பல்ஸ் 125 – 145 65 – 80 2 – 6
சாணக்கியா 145 – 160 50 – 65 13 – 18 5 – 8
அக்னி 169 64 1 0
மேட்ரீக்ஸ் 122 – 132 87 – 100 12 – 16 1 – 6
வோட் வைப் 103 – 113 114 – 124 4 – 10