அசாம் மாநிலத்தில் சாய்ராங்–புது தில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மீது யானைக் கூட்டம் மோதியதில், ரயிலின் எஞ்சின் உள்ளிட்ட ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் எட்டு யானைகள் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு குட்டி யானை காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறது.
வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் லும்டிங் பிரிவில், குவஹாத்தியிலிருந்து சுமார் 126 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தண்டவாளத்தை கடந்து சென்ற யானைக் கூட்டத்தை கண்ட லோகோ பைலட் அவசரகால பிரேக்கை பயன்படுத்தினாலும், ரயில் யானைகள் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ரயிலில் பயணித்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடம் புரண்டதால் தண்டவாளத்தில் யானைகளின் உடல்கள் சிதறிக் கிடந்ததால், மேல் அசாம் மற்றும் வடகிழக்கின் சில பகுதிகளுக்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு ரயில்கள் மற்றும் ரயில்வே, வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள், மற்ற பெட்டிகளில் காலியிடங்களில் தற்காலிகமாக அமர்த்தப்பட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெட்டிகள் பிரிக்கப்பட்டு, ரயில் குவஹாத்திக்கு அனுப்பப்பட்டது. குவஹாத்தியை அடைந்த பின்னர் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு, ரயில் மீண்டும் பயணத்தைத் தொடரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
