கர்நாடக மாநிலத் திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டி. சுதாகர் (66), ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
கடந்த மார்ச் மாதம் முதலே கடும் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டு வந்த அமைச்சர் சுதாகர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில வாரங்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரது உடல்நிலை, கடந்த வாரம் மிகவும் மோசமடைந்தது. எக்மோ போன்ற நவீன உயிர்காக்கும் கருவிகள் மூலம் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.15 மணியளவில் அவர் காலமானதாக மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஆர். சின்னதுரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கர்நாடக அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழ்ந்தார். ஹிரியூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வான இவர், 2004-இல் சல்லகெரே தொகுதியிலிருந்தும், 2008 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் ஹிரியூர் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு சமூக நலத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
மைச்சர் சுதாகரின் மறைவுக்குக் கர்நாடக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் எனப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். சாதாரண மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு அனுபவம் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினரை கர்நாடகா இழந்துவிட்டதாகப் அரசியல் பிரமுகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர் . அவரது மறைவைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான சித்திரதுர்கா மற்றும் ஹிரியூர் தொகுதியில் சோக மேகம் சூழ்ந்துள்ளது.
