தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், அத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான செல்வப்பெருந்தகை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் தென்னரசுவிடம் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியுள்ளார். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தவெக வேட்பாளர் தென்னரசு தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டே வந்தார்.

​முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆளுமையாக விளங்கிய செல்வப்பெருந்தகையை, ஒரு புதிய கட்சியின் வேட்பாளர் வீழ்த்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மக்கள் பாரம்பரிய கட்சிகளை விட, தவெக முன்வைத்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு தென்னரசுவிற்கு பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளனர். இந்த வெற்றியானது தமிழகம் முழுவதும் தவெக-விற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முழுவதும் தவெக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.